தாமிர(I) பாசுபைடு
தாமிர(I) பாசுபைடு (copper(I) phosphide) என்பது Cu3P என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தாமிர பாசுபைடு, குப்ரசு பாசுபைடு, குப்ரோ பாசுபரசு, பாசுபர் தாமிரம் என்ற பெயர்களாலும் இச்சேர்மத்தை அழைக்கின்றனர். தாமிரம் மற்றும் பாசுபரசு தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. தாமிரத்தின் பாசுபைடு உப்பு தாமிரம்(I) பாசுபைடு என வகைப்படுத்தப்படுகிறது. மஞ்சள் கலந்த சாம்பல் நிறத்தில் எளிதில் நொறுங்கக் கூடிய படிகக் கட்டமைப்பை இச்சேர்மம் பெற்றுள்ளது. தண்ணீருடன் தாமிரம்(I) பாசுபைடு வினைபுரிவதில்லை. பாசுபர் வெண்கலம் என்ற பெயரில் தாமிரம்(I) பாசுபைடு தாமிர கலப்புலோகங்களில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தாமிரத்தின் மிகச்சிறந்த ஓர் ஆக்சிசனகற்றியாக இது செயல்படுகிறது. எதிர் அனல் உலை அல்லது ஓர் மூசை உலையில் தாமிரம்(I) பாசுபைடு உற்பத்தி செய்யப்படுகிறது. உதாரணமாக சிகப்பு பாசுபரசுடன் தாமிரம் மிகுதி பொருள் ஒன்றுடன் சேர்த்து மேற்கண்ட உலையில் இட்டு இது தயாரிக்கப்படுகிறது. குப்ரிக் ஐப்போபாசுப்பைட்டை கதிர்வீச்சுக்கு உட்படுத்தியும் ஒளிவேதியியல் முறையில் இதைத் தயாரிக்கலாம். புறஊதா கதிரைப் பயன்படுத்தி கதிர்வீச்சுக்கு உட்படுத்தும்போது தாமிர பாசுபைடு ஒளிர்வை வெளிப்படுத்துகிறது[2]. வெண் பாசுபரசுடன் தாமிர உப்புக் கரைசலைச் சேர்க்கும்போது கருநீல தாமிர பாசுபைடு படலம் வெண்பாசுபரசின் மீது உருவாகிறது. எனவே, பாசுபரசு துகள்களைக் கொண்டிருக்கும் காயங்கள் 1% தாமிர சல்பேட்டு கரைசலால் கழுவப்படும்போது அத்துகள்கள் எளிதாக நீக்கப்படுகின்றன. அவற்றினுடைய ஒளிர்வு பண்பு இதற்கு உதவுகிறது. பாசுபரசை உட்கொள்வதால் மேற்கொள்ளப்படும் இரைப்பைகழுவலுக்கு தாமிர சல்பேட்டை பயன்படுத்தும்போது தாமிர பாசுபைடு பாதுகாப்பு அடுக்கு உருவாதல் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது[3]. மேற்கோள்கள்
Information related to தாமிர(I) பாசுபைடு |
Portal di Ensiklopedia Dunia